அண்ணாமலை ஒரு ஜீரோ... டெபாசிட் கூட பெறமுடியாமல் தோற்றவர் - ஆதித்யா தாக்கரே கடும் தாக்கு
- மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
- தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் என்று அண்ணாமலையை ராஜ் தாக்கரே விமர்சித்தார்
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே Ink அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். Ink அடித்துப் பாருங்கள். மிரட்டல், உகுட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு எதிராக ராஜ் தாக்கரே தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.