7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை- உடலை டிரம்மில் அடைத்த வாலிபர்
- சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். நெசவு தொழிலாளி. இவரது மகள் ரிஷிகா பிரியா (வயது 7). பெற்றோர்கள் இருவரும் தனித்தனியாக வேலைக்குச் சென்று தங்களது 2 குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரஷிகா பிரியா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று இருந்தனர்.
சிறுமியின் எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் குல்வர்தன் (30). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை குல்வர்தன் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்தார்.
யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை அடைத்து வைத்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவன், மனைவி இருவரும் பதறி அடித்து கொண்டு வந்து அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மதனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் குல்வர்தன் வீட்டின் கதவை தட்டினர். மது போதையில் இருந்த குல்வர்தன் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது குல்வர்தன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குல்வர்தன் ரிஷிகா பிரியாவை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மீண்டும் குல்வர்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குல்வர்தன் போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரிஷிகா பிரியாவின் உடலில் ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியின் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குல்வர்தனை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குல்வர்தனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.