இந்தியா

வெறுப்பு பேச்சுக்கு எதிராக பொதுநல மனு.. பாஜக முதல்வர்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி

Published On 2026-02-18 07:16 IST   |   Update On 2026-02-18 07:18:00 IST
  • நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள்.
  • நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?

நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக 12 பேர் இணைந்து தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி, "நாட்டில் நிலவும் சூழல் மிகவும் நச்சுத்தன்மையுடன்மாறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும்" என்று வாதிட்டார்.

இந்த மனுவில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்(உ.பி), ஹிமந்த விஸ்வ சர்மா(அசாம்), தேவேந்திர பட்னாவிஸ்(மகாராஷ்டிரா), புஷ்கர் சிங் தாமி(உத்ராகண்ட்) உள்ளிட்ட சில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் மற்றவர்களை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் இலக்கு வைப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புனார்.

மேலும், நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள். வெறுப்புப் பேச்சு என்பது அனைத்துத் தரப்பிலும் உள்ளது.

வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டுமானால், அவை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

வெறுப்புப் பேச்சு என்பது ஒருவரின் எண்ணத்திலிருந்து உருவாகிறது. நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?" என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, மனுவில் உள்ள தனிநபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கபில் சிபல் ஒப்புக்கொண்டார். இதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.  

Tags:    

Similar News