50% வரி.. இந்தியா-பாகிஸ்தான் மத்தியஸ்தம் - டிரம்பின் அலப்பறைகளை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!
- உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்திய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம்.
- அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை.
டெல்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் வேர்ல்ட் லீடர்ஸ் ஃபோரம் 2025' நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், "நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் நலன்கள் தான் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்.
விவசாயிகளின் நலன்களில் சமரசத்திற்கு இடமில்லை. இந்திய தயாரிப்புகளை வாங்க அமெரிக்காவை யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்திய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை சமரசம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றையும் ஜெய்சங்கர் நிராகரித்தார். 1971 இந்தோ-பாக் போர் முதல் கடந்த 50 வருடங்களாக இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சித்த ஜெய்சங்கர், அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. அதிபர் டிரம்ப் உலகைக் கையாளும் விதம், தனது சொந்த நாட்டைக் கையாளும் விதம் கூட, பாரம்பரிய மரபுவழியில் இருந்து மிகப் பெரிய அளவில் விலகிச் செல்வதாக தெரிவித்தார்.