செய்திகள்

அமேதியில் சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல்

Published On 2019-04-10 07:38 GMT   |   Update On 2019-04-10 07:38 GMT
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சோனியா காந்தி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination
அமேதி:

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக இன்று காலை அமேதியை அடைந்த ராகுல் காந்தி, முன்ஷிகஞ்ச்-தர்பிபூர் பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். திறந்த வாகனத்தில் சென்ற ராகுலுக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிராயா ஆகியோர் உடன் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக காரில் சென்றார்.



சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த ஊர்வலம் கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சோனியா காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.

ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 5-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination
Tags:    

Similar News