செய்திகள்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்

Published On 2019-02-25 08:56 GMT   |   Update On 2019-02-25 08:56 GMT
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
புதுடெல்லி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தார்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ். அணி இணைந்தது.

இதற்கிடையே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சபா நாயகர் முடிவில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் சக்கரபாணி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

இதன் மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்றது. இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது. இறுதி விசாரணை முடிந்தால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.



இந்த நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தி.மு.க., டி.டி.வி. தினகரன் தரப்பில் முறையிடப்பட்டது.

ஆனால் விரைவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவாக விசாரிக்க முடியாது. வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
Tags:    

Similar News