இந்தியா

ராஜினாமா செய்து 5 மாதமாகியும் ஜகதீப் தன்கருக்கு ஒதுக்கப்படாத அரசு பங்களா

Published On 2025-12-30 15:25 IST   |   Update On 2025-12-30 15:25:00 IST
  • இந்தியாவின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜகதீப் தன்கர்.
  • ஜூலையில் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், டெல்லியில் தனியார் பண்ணை வீட்டிற்கு மாறினார்.

புதுடெல்லி:

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜகதீப் தன்கர் (74).

கடந்த ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவராக இருந்த அவர், முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். அன்றைய தினமே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜூலையில் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜகதீப் தன்கர் டெல்லி சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு மாறினார்.

அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்க வேண்டும்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆன நிலையிலும் ஜகதீப் தன்கருக்கு அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

அரசு விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு, டில்லியில் உள்ள லுட்யென்ஸ் அரசு தோட்டத்தில் டைப் - 8 பங்களா அல்லது அவர்களின் சொந்த ஊரில், 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News