'வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை வழக்கறிஞர்கள் முதல்நாளே தெரிவிக்க வேண்டும்' - உச்ச நீதிமன்றம்
- ஆன்லைன் போர்டல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
- விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாள் முன்னரே தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
"மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது பதிவுபெற்ற வழக்கறிஞர்கள், நோட்டீஸ் அனுப்பப்பட்ட மற்றும் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 'வருகை சீட்டுகளை' சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்டல் வாயிலாகவே இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், தங்களின் 'பதிவுபெற்ற வழக்கறிஞர்' மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நோடல் வழக்கறிஞர் மூலமாகவோ, ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த காலக்கெடுவை உறுதி செய்யும் வகையில், அதன் நகலை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு, விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் தங்களுடைய வாய்மொழி வாதங்களை அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.