இந்தியா

சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்- மறுஆய்வு மனுக்கள் நாளை சுப்ரீம் கோர்ட்டில் பரிசீலனை

Published On 2026-02-15 13:59 IST   |   Update On 2026-02-15 13:59:00 IST
  • கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் ஆலயத் தடை பாலின பாகுபாட்டிற்குச் சமம் என்றும் கூறியது.

இதனை கேரளாவில் ஆளும் இடது சாரி அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்த போது, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பக்தர்களும், அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை (16-ந்தேதி) பரிசீலிக்க உள்ளது. இதே போல் கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது. அப்போது கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

இந்த விவகாரம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இடது சாரி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தனிடம் கேட்டபோது, கட்சியின் தலைமையால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. அதே நேரத்தில், பக்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்கும் என்று நம்புவதாக கூறினார். மேலும் "இது ஒரு சிக்கலான வழக்கு. தேவைப்படும்போது இந்த விஷயத்தில் சி.பி.எம். தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 51 பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததாக 2020 ஆம் ஆண்டில் இடதுசாரி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அரசாங்கம் 51 பெண்களின் பெயர்களையும், ஆதார் அட்டை மற்றும் முகவரிகள் உள்ளிட்ட பிற விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். பெயர்களில் எதுவும் கேரளாவைச் சேர்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News