செய்திகள்

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி பெரும் சரிவை சந்திக்கும்- அமித்ஷா பேச்சு

Published On 2019-02-23 05:14 GMT   |   Update On 2019-02-23 05:14 GMT
கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி பெரும் சரிவை சந்திக்கும் என்று பாரதீய ஜனதா கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார். #amitshah #bjp #communistparty

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக முக்கிய தேர்தல் இந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். அதற்கு கேரள மக்கள் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.


சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு கம்யூனிஸ்டு அரசு துரோகம் செய்து விட்டது. கோவிலின் ஆச்சாரத்தை பாதுகாக்க போராடிய பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அய்யப்ப பக்தர்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டு அரசு அதற்கான பலனை அனுபவித்தே தீரும். பக்தர்களுக்கு நீதியை மறுத்து அநீதி இழைத்த கம்யூனிஸ்டுகள் அழிவை சந்திக்கும் காலம் நெருங்கி விட்டது.

உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது. கேரளாவிலும் விரைவில் இந்த நிலை ஏற்படும். இங்கும் கம்யூனிஸ்டுகள் சரிவை சந்திக்கப்போவது உறுதி.

கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே சபரிமலை பிரச்சினையில் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த இன்னொரு உத்தரவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டதா? அனைத்து மசூதிகளிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை இந்த அரசு அகற்றி இருக்கிறதா?

கேரள மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் இந்த அரசு, அரசியல் செய்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் கேரளாவில் வன்முறை நடக்கும். இதுவே காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் ஊழல் செய்வார்கள்.

இந்த இரு கட்சியினரும் இதைதான் மாறி மாறி செய்து வருகிறார்கள். அவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி வருகிறீர்கள்.

இந்த முறை கேரள மக்கள் மாற்றத்தை தரவேணடும். பாரதீய ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கேரளாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா மாறும். ஊழல்வாதிகள், வன்முறையில் ஈடுபட்டோர் ஜெயிலுக்கு செல்வார்கள்.

எனவே கேரள மக்கள் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை. ஆனால் பாரதீய ஜனதா, மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு கேட்கிறது. இம்முறை கேரள மக்கள் அந்த வாய்ப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #amitshah #bjp #communistparty

Tags:    

Similar News