இந்தியா

இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்தது- ஐ.நா. அறிக்கையில் தகவல்

Published On 2026-01-01 08:43 IST   |   Update On 2026-01-01 08:43:00 IST
  • 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன.
  • தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. உலக மக்கள் தொகையை கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி, 823 கோடியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் 146.3 கோடியாக உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் 2025-ம் ஆண்டில் மட்டும் எவ்வளவு பிறப்பு எண்ணிக்கை இருந்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஐ.நா. 23.1 மில்லியன் அதாவது 2 கோடியே 31 லட்சம் இருக்கலாம் என கணித்திருந்தது.

அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 2025-ல் இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் என்று கூறியுள்ளது. இது உலகிலேயே ஒரு நாட்டில் ஆண்டில் அதிகபட்ச பிறப்பு எண்ணிக்கையாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

இதே நிலையில் 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவை விட 3 மடங்கு அதிகம் பிறப்பு எண்ணிக்கையை கொண்டிருக்கிறது இந்தியா. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், பிறப்பு விகிதம் என்பது கடந்த ஆண்டுகளைவிட குறைந்து வருவதாகவே சொல்லப்படுகிறது. 1960-களில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 6 குழந்தைகள் என்று இருந்த நிலை மாறி, இப்போது 1.9 ஆக குறைந்துள்ளது. இது 2.1 என்ற நிலைத்தன்மை விகிதத்தை விட குறைவு ஆகும்.

பிறப்பு விகிதம் குறைந்ததற்கு தாமதமான திருமணங்கள், கருத்தரிப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்புக்கான பொருளாதார செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.

2025-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனாவில் 87 லட்சமாகவும், நைஜீரியாவில் 76 லட்சமாகவும், பாகிஸ்தானில் 69 லட்சமாகவும், காங்கோவில் 46 லட்சமாகவும், இந்தோனேசியாவில் 44 லட்சமாகவும், எத்தியோப்பியாவில் 42 லட்சமாகவும், அமெரிக்காவில் 37 லட்சமாகவும், வங்காளதேசத்தில் 34 லட்சமாகவும், பிரேசிலில் 25 லட்சமாகவும் இருந்துள்ளன.

நடப்பு ஆண்டில் (2026) இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சமாக இருக்கலாம் என ஐ.நா. கணித்திருக்கிறது. ஐ.நா.வின் கணிப்புகள் ஒருபுறம் இருக்க மத்திய அரசு 2026 ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாட்டின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது 2027-ல் நிறைவடையும்போது, இந்தியாவின் உண்மையான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் இன்னும் துல்லியமாகத் தெரியவரும்.

Tags:    

Similar News