காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் 'நிம்சுலைடு' மருந்துக்கு மத்திய அரசு தடை
- இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது 100 மி. கிராமுக்கு மேலான 'நிம்சுலைடு' மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்,
"100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.