செய்திகள்

தேவசம்போர்டு கோவில்களில் காணிக்கை செலுத்தக்கூடாது - நடிகர் சுரேஷ்கோபி எம்.பி.

Published On 2018-10-13 05:05 GMT   |   Update On 2018-10-13 05:05 GMT
சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தேவசம்போர்டு கோவில்களில் பக்தர்கள் ஒரு ரூபாய்கூட காணிக்கை செலுத்தக்கூடாது என்று நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. கூறியுள்ளார். #Sabarimala #TDB

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு கமி‌ஷனர் அலுவலகம் முன்பு அய்யப்ப சேவாசங்கம் உள்பட 17 இந்து அமைப்பினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார் வர்மா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-

காலம், காலமாக சபரி மலையில் ஆச்சாரப்படி பூஜைகள் நடந்து வருகிறது. அங்கு பெண்கள் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. கம்யூனிஸ்டு அரசு தற்போது மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. கேரளாவில் அமைதியை குலைக்க நினைக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.

ஒரு பெண் சபரிமலை கோவிலில் நுழைந்தாலும் சபரிமலை கோவில் நடையை மூடும் நிலை ஏற்படும். அங்கு சுத்தி பூஜை செய்ய வேண்டும். சபரிமலை தொடர்பான எந்த முடிவையும் ராஜ குடும்பமும், தந்திரியும்தான் எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


நடிகரும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ்கோபி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

சபரிமலையின் ஆச்சாரத்தை கெடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு அரசு நினைக்கிறது. வருடம்தோறும் அதிகளவு பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு மட்டும் தான் வருகிறார்கள். இந்த நிலையில் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்க நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் தேவசம்போர்டு கோவில்களில் பக்தர்கள் ஒரு ரூபாய்கூட காணிக்கை செலுத்தக்கூடாது. பக்தர்களின் வருமானத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக செயல்படும் கடைசி கம்யூனிஸ்டு அரசாக இது இருக்க வேண்டும். தெய்வத்துக்கு பணம் தேவை இல்லை. பூ மற்றும் பூஜை பொருட்களுடன் சென்றால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #TDB

Tags:    

Similar News