தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2025-12-29 10:52 IST   |   Update On 2025-12-29 10:52:00 IST
  • அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  • செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சேலம்:

சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை இடங்களை கேட்பது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

இதில் செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் மன்சூர், மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் பொதுக்குழுவில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். இதனால் இந்த கூட்டம் அரசியல் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது இருக்கையில் டாக்டர் ராமதாஸ் படத்துடன் கூடிய பையில் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர், கடலை உருண்டை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் நேற்று மதியம் சேலம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் செயற்குழு, பொதுக்குழு நடந்த மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சேலம் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. மாநில இணை பொதுச்செயலாளர் இரா.அருள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர். 

Tags:    

Similar News