செய்திகள்

பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க காங்-ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தஞ்சம்

Published On 2018-05-17 06:37 GMT   |   Update On 2018-05-17 06:37 GMT
பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
பெங்களூர்:

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.

அதற்கு 104 எம்.எல். ஏ.க்களே உள்ளனர். மெஜாரிட்டிக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

2 சுயேட்சைகளில் ஒருவரான சங்கர் காலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மாலையில் காங்கிரசை ஆதரிப்பதாக பல்டி அடித்தார். இப்போது இரு சுயேச்சைகளுமே காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால் காங்கிரசின் பலம் 78-ல் இருந்து 80 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே எதிர் அணியில் இருந்து 8 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவைப் பெற பா.ஜனதா மறைமுகமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதற்காக வருமான வரித்துறை சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 3 ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களும் மாயமாகி விட்டதாக பெங்களூரில் தகவல் பரவியது. இதனால் காங்கிரஸ், ஜே.டி.எஸ். வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.



இதையடுத்து எம்.எல். ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேரம் பேசுவதை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நேற்று பகலில் பஸ்கள், கார்களில் அழைத்துச் செல்லப்பட்டு ராமநகரம் அருகே பிடதியில் உள்ள கோல்டன் ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க் கள் பெங்களூரில் கவர்னர் மாளிகை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை பாதுகாக்கும் பொறுப்பு முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி மேல்- சபை தேர்தலின் போது கட்சி தாவாமல் இருக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கோல்டன் ரிசார்ட் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.

அபபோது மந்திரியாக இருந்த சிவகுமார்தான் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பை கவனித்தார். இதற்காக சிவகுமார் வீடு - அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
Tags:    

Similar News