உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2023-06-14 11:06 IST   |   Update On 2023-06-14 12:22:00 IST
  • வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல.
  • தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

சென்னை:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் சட்ட விரோதமாக பார்கள் நடத்தி கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. சட்ட விரோத மது விற்பனை மூலம் அரசின் கருவூலத்திற்கு வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படி தனது கடமையை செய்திருக்கிறது.

வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார். நேற்று வரை அவர் ஆரோக்கியமாக இருந்தார். வாக்கிங் சென்றார். திடீரென்று அவருக்கு எப்படி நெஞ்சு வலி வந்தது.

எனவே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல. தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

அ.தி.மு.க. ஆட்சியின் போது தலைமை செயலகத்தில் நடந்த சோதனையின் போது தமிழகம் தலைகுனிந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். இப்போது தமிழகம் தலை நிமிர்ந்து விட்டதா? தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவரை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அமைச்சர்கள் எல்லோரும் போய் பார்க்கிறார்கள்.

அமலாக்கத்துறையின் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் நீக்காவிட்டால் கவர்னர் தலையிட்டு செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News