மாயமான பள்ளி மாணவன் கிஷோர்.
வீட்டை விட்டு வெளியே சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்
- தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம் என கண்டித்துள்ளார்.
- சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே சென்னப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி இந்திரா (35). இவர்களது மகன் கிஷோர் (16).
இவர் கடந்த ஆண்டு ஈரோடு ெரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது நடந்த தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்து வருகிறார்.
இதை தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வு எழுதினார். இதில் அவர் சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் தோல்வி அடைந்தாராம். இதனால் கிஷோரின் தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம். தேர்ச்சி பெறாததை குறித்து கண்டித்து உள்ளார்.
இதனால் கிஷோர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவர் சைக்கிளை எடுத்து கொண்டு நஞ்சை ஊத்துக்குளி சென்றார். அங்கு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.