தி.மு.க. 2-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர வாய்ப்பில்லை- நயினார் நாகேந்திரன்
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார்.
- தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்ததற்கு மகிழ்ச்சி. அவர் எதிர்பார்த்தபடியே நல்ல முடிவை எடுத்துள்ளார். இதனால் கூட்டணி பலம் அதிகரிக்கும். ஓ.பன்னீர் செல்வம் எங்களுடன் தான் இருப்பார். வேறு பாதையில் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயலாற்றுவார்.
2-வது முறையாக தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது கிடையாது. இதில் கருணாநிதி பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்தார். எனவே வருகிற தேர்தலில் அதற்கு சாத்தியம் இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார். த.வெ.க.வில் இணைந்து தவறான பாதையில் சென்று விட்டார். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.