தாம்பரம் பகுதியில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
- காய்ச்சல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு வார்டு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. 5 மண்டலங்களாக பிரித்து மக்கள் நலப்பணி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாம்பரம் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலர் டெங்கு, மலேரியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலையூர் பகுதியில் விடுதியில் தங்கி படித்த கேரளா மாணவி ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். மேலும் உடன் தங்கி இருந்த மேலும் 7 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாநகராட்சி சார்பில் விடுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 16 வயது ஈசன் என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார். இதனால் 10 நாட்களில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 உயர்ந்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மாநகராட்சி அதிகாரிகள் சரிவர சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கவில்லை. மற்றும் கொசு அதிகம் பரவாமல் இருக்க காலை மற்றும் மாலைகளில் மருந்து அடிக்க வேண்டிய பணியை சரிவர செய்யவில்லை. ஏதோ பெயருக்காகவே பணிகள் செய்கிறார்கள். இதனாலே காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்றனர்.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் கூறும் போது, தாம்பரம் பகுதியில் காய்ச்சல்கள் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. காய்ச்சல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வார்டு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு காலிமனையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், அவற்றில் கொசுக்கள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.