வரத்து குறைந்தது- மல்லிகைப் பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை
- வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது.
- அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மல்லிகைபூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1500 முதல் ரூ.2ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது. மேலும் நேற்று தைமாத கிருத்திகை, இன்று சுப முகூர்த்த நாள் என அடுத்தடுத்து விஷேச நாள் என்பதால் வழக்கத்தை விட தேவை அதிகரித்து உள்ளதால் மல்லி பூ விலை உச்சம் அடைந்து உள்ளது. மேலும் பிப்ரவரி 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாள் அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு :-
சாமந்தி-ரூ.80 முதல் ரூ.120வரை,
முல்லை-ரூ.500,
கனகாம்பரம்-ரூ.800,
ஜாதி-ரூ.400,
பன்னீர் ரோஜா-ரூ.80,
சாக்லேட் ரோஜா-ரூ.100,
அரளி-ரூ.150,
செவ்வரளி-ரூ.200,
சம்பங்கி-ரூ.40.