த.வெ.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் - சபாநாயகர் அப்பாவு
- தமிழக முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
- நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
நெல்லை:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி பேசினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த 5 பேர் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மகாராஷ்டிர மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9,703 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
மேலும் 5,469 தனியார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் இன்று மட்டும் 2,480 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த லேப்டாப்பை பயன்படுத்தி உலகத் தகவல்களை தெரிந்துகொண்டு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். ஆடல், பாடல், நடிப்பு போன்றவை எல்லாம் நீர்க்குமிழி போன்றது. அதை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்ததும், சென்றதும் நல்ல முறையில் இருந்தது. ஆனால், அவர் அச்சிடப்பட்ட உரையை வாசிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முதலமைச்சர் வழங்கினார்.
ஆளுநர் உரையை அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அச்சிடப்பட்டது. அதை வாசிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. சொந்தக் கருத்துக்களை பேசவோ, தவிர்ப்பதற்கோ அதிகாரம் இல்லை. முதலமைச்சர் ஜனநாயக முறைப்படியே நடந்து கொண்டார்.
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதி, கூட்டணி கட்சிகள் குறித்து பேசியது பற்றி கேட்கிறீர்கள். இது குறித்து தலைவர் ஏற்கனவே கண்டித்துள்ளார்.
கூட்டணி தொடர்பான விவகாரங்களை தலைமை மட்டுமே பேச வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகமும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள். இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக இணைந்து, தி.மு.க.விற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, தற்போது அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
வேறு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓவைசி என்பவர் எப்படி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறாரோ, அதேபோல்தான் தமிழகத்தில் விஜயை முன்னிறுத்த பா.ஜ.க. பார்க்கிறது. ஆனால் சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆதரவு சக்திகளுக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.