தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும் - தேசிய செயலாளர் நிவேத் ஆல்வா
- தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான நிவேத் ஆல்வா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்பதற்காக வந்துள்ளேன்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தை மாற்றுவது குறித்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து அதனை மாற்றியது தவறு.
வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கேபினட் பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் மத்திய அரசு எப்படி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செய்வது மத்திய அரசின் தவறான செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.