அடையாறில் சாக்கு மூட்டையில் பிணம்: வடமாநில வாலிபர், மனைவி-குழந்தையையும் கொன்ற கும்பல்
- போலீசார் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
சைதாப்பேட்டை:
சென்னை அடையார், இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கடந்த 26-ந்தேதி காலை ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அடையார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் எண் என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் கொலையுண்ட வாலிபர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை. தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.
அடையாறு கெனால் ரோடு கூவம் ஆற்று ஓரம் உள்பட கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.