தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் கடல் நுரைபோல் வெண்மேகங்கள் தவழ்ந்து செல்லும் ரம்ய காட்சி- சுற்றுலா பயணிகள் வியப்பு

Published On 2026-01-28 10:49 IST   |   Update On 2026-01-28 10:49:00 IST
  • பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.
  • தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது சாரல் மழை, உறைபனி, உறையவைக்கும் குளிர் ஆகியவை வாட்டி எடுத்து வருகிறது.

பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர். தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது கொடைக்கானல் பகுதியில் கடல் நுரை பொங்கி எழுவது போல வெண்மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் செண்பகனூர் சிட்டி வியூ, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளில் வானத்தில் இருந்து மேகக்கூட்டங்கள் தரையிறங்கி மலை முகடுகளை முத்தமிடுவது போல வந்த காட்சி வெகுவாக ரசிக்க வைத்தது.

"வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்" என்ற வைரமுத்து வரிகளுக்கேற்ப கொடைக்கானலில் தினந்தோறும் காணப்படும் ரம்யமான சூழல் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுத்து வருகிறது. அதன் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News