ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று ரத்து
- கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயில் அடர்ந்த வனங்களுக்கு நடுவே பயணிப்பதால் இதில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுவர்கள்.
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. அதில் 191 பயணிகள் இருந்தனர்.
மலை ரெயில் கல்லாறு-ஹல்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடர்லி ரெயில் நிலையத்தில் இருந்து 191 பயணிகளுடன் மலை ரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு சென்றதும் பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.