தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-28 12:41 IST   |   Update On 2026-01-28 12:41:00 IST
  • கழகம் வளர்வதற்குத் திருச்சியில் முக்கியக் காரணமாக இருந்தவர்களில் பெரியவர் பாலகிருஷ்ணனும் ஒருவர்.
  • பாலகிருஷ்ணன் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அன்பில் ஆகியோரோடு பயணித்தவர்.

திருச்சி:

திருச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் மா.பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பால கிருஷ்ணன்-மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே.மோகன்-எம். சாந்த குமாரி மகள் டாக்டர் எம். மீனாட்சிக்கும் திருமண விழா இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக மு.க.ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் முதலமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது அவர் பேசியதாவது:

இந்த பகுதியிலே திராவிட முன்னேற்ற கழகம் வளர்வதற்கு, நமது இரு வண்ண கொடி இந்த வட்டாரத்தில் பறப்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் பால கிருஷ்ணன். அவர் இன்று இல்லை என்று சொன்னாலும், அவரது மகன் பரணி குமார் இந்த இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டு தந்தை விட்டு சென்று இருக்கும் பணிகளை எல்லாம் சிறப்பாக செய்து இருக்கிறார். பாலகிருஷ்ணன் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அன்பில் ஆகியோரோடு பயணித்தவர்.

கழகம் வளர்வதற்குத் திருச்சியில் முக்கியக் காரணமாக இருந்தவர்களில் பெரியவர் பாலகிருஷ்ணனும் ஒருவர். பரணிகுமார் என்னோடு 20 ஆண்டு காலமாகச் சுற்றுப்பயணங்க ளில் நிழல் போலத் தொடர்ந்தவர். நான் இளைஞரணி தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது, எனது காரை ஓட்டியவர் பரணிகுமார் தான்.

அவர் கார் ஓட்டும்போது எனக்கு எந்த அச்சமும் இருக்காது. பல நேரங்களில் இரவு 2 அல்லது 3 மணி வரை காரை ஓட்டிவிட்டு, மீண்டும் அதிகாலையிலேயே தயாராகிவிடுவார். திருச்சிக்கு வரும் போதெல்லாம் நான் பரணிகுமார் வீட்டுக்கு வராமல் இருந்தது இல்லை. மகளிர் அணி மாநாடு ஒரு பக்கம், இளைஞர் அணி மாநாடு ஒருபக்கம் என அடுத்து திருச்சியில் 10 லட்சம் பேர் திரளும் மாநாட்டை நேரு பிரமாண்டமாக நடத்த உள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நான் இந்த திருமணத்திற்கு வந்து இருக்கிறேன் என்றால் பரணிகுமார் மீதும், பால கிருஷ்ணன் குடும்பத்தின் மீதும் கொண்ட பாசம், பற்று, நட்பிற்காகத்தான்.

அப்படிப்பட்ட அந்த குடும்பத்தில் குலவிளக்குகளாக இருக்கக்கூடிய மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று சீரும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாவேந்தர் பாரதிதாசன் எடுத்து சொல்லி இருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் மணமக்கள் வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News