செய்திகள்

அரசியலுக்காக அதிமுக மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார்- தம்பிதுரை

Published On 2019-02-26 07:50 GMT   |   Update On 2019-02-26 07:50 GMT
அரசியலுக்காக அ.தி.மு.க. மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார் என்று தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
கரூர்:

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்காக, தமிழகத்தின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை எப்படி பயன்படுத்தி உரிமைகளை பெற்றாரோ? அதனடிப்படையில் எடப்பாடி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

திராவிட கட்சிகளின் உயிர் மூச்சான சுயாட்சி கொள்கையில் தெளிவாக கொள்கை பிடிப்பாக இருப்போம். அ.தி.மு.க. போன்று பா.ஜ.க.வுக்கும் தனியாக கொள்கை இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ்- தி.மு.க.தான். அவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.

18 ஆண்டுகள் மத்தியிலும், 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில்தான் கச்சத்தீவு பிரச்சனை வந்தது. இலங்கையில் ஒன்றரை கோடி அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதற்கு இந்திய ராணுவம் துணை புரிந்ததாக ராஜபக்சே ஒப்புக்கொண்டார். தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க.வை மத்திய ஆட்சியில் பங்கேற்பதற்கோ, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கோ? எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

மத்தியில் அ.தி.மு.க. எதிர் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் நானும் குரல் கொடுத்து இருக்கிறேன். பாராளுமன்றத்தின் அவையை முடக்கியதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதே போன்று மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது என பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டோம்.

தற்போது மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. கஜா புயல் நிவாரணத்துக்கு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மீண்டும் கேட்டு இருக்கிறோம். இப்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்குகளில் துரிதமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் மட்டுமல்ல எல்லா கட்சிகளும் குற்றஞ்சாட்டின. அதில் உண்மை இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க. மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அரசியலுக்காக கொடுத்திருப்பார்கள். இது தான் எங்கள் கருத்து.

நீட் தேர்வினை நடத்தி காண்பித்தது காங்கிரசும், தி.மு.வும் தான். ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்துக்கு துரோகமும், இடர்பாடுகளும் ஏற்பட்டன. இதை தி.மு.க. எங்கள் மீது திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 2011-ல் தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள தி.மு.க-காங்கிரஸ்தான் சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
Tags:    

Similar News