போராட்டக்காரர்கள்- போலீசார் மோதல்: ஈரானில் வன்முறையில் 7 பேர் பலி
- ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்தனர்.
- கடந்த 28-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
தெஹ்ரான்:
ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்தனர். கடந்த 28-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முதலில் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய போராட்டம் , நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக கிராமப்புற மாகாணங்களில் போராட்டங்கள் நடந்தது.
இந்த நிலையில் ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்னா நகரில் மக்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர்.
அங்கு போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஈரானின் சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது.
ஈரானில் போராட்டம்-வன்முறையில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதே உயிரிழப்புக்கு காரணம் என்று ஆர்வலர் குழுக்கள் குற்றம் சாட்டி உள்ளன. இதற்கிடையே போராட்டக்காரர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.