செய்திகள்

ஏடிஎம் பணம் ரூ.1.20 கோடி கொள்ளை - ஊழியர்கள் 4 பேர் கைது

Published On 2018-12-21 05:16 GMT   |   Update On 2018-12-21 05:29 GMT
சாயல்குடி அருகே ஏடிஎம் பணம் 1.20 கோடி கொள்ளை போனதாக கூறப்பட்ட புகாரில் பணத்தை கொண்டு சென்ற பாதுகாப்பு ஊழியர்களே அதனை திருடி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. #AtmMoneyRobbery

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

நேற்று சிவங்கையைச் சேர்ந்த அன்பு (வயது28), திருப்பாலைக்குடி வீரபாண்டி (54), இளையான்குடியைச் சேர்ந்த குருபாண்டி (22) மற்றும் சத்திரக்குடியைச் சேர்ந்த டிரைவர் கபிலன் (23) ஆகியோர் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்ப ரூ.1 கோடியே 60 லட்சத்தை கொண்டு சென்றனர்.

இதில் ரூ.40 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பிய அவர்கள் மீதம் உள்ள பணத்தை சாயல்குடி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பாதுகாப்பு வேனில் சென்றனர்.

கடலாடி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் வேன் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாகவும், அப்போது மர்ம நபர்கள் வேனில் இருந்த ரூ.1 கோடியே 20 லட்சத்தை திருடிக்கொண்டு சென்றதாக பணத்தை கொண்டு சென்ற 4 ஊழியர்களும் சாயல்குடி போலீசில் புகார் தெரிவித்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் மற்றும் போலீசார் 4 ஊழியர்களையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4 பேரும் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து 4 பேரையும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேனை கவிழ்த்து விட்டு பணத்தை இவர்களே எடுத்துக் கொண்டு திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அன்பு, வீரபாண்டி, கபிலன், குருபாண்டி ஆகிய 4 பேரையும கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.32 லட்சத்தை கைப்பற்றினர். மீதமுள்ள பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AtmMoneyRobbery

Tags:    

Similar News