போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
- திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
- வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
ஜன நாயகன் படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகதாததால் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரௌபதி 2 திரைப்படம் சுபாஷ் சந்திர போஸின் பிறந்ததினமான ஜனவரி 23 அன்று வெளியாகிறது. பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் முதல் படைப்பு திரௌபதி 2 திரைப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
எங்களின் இந்த முடிவை பெரியமனதுடன் ஏற்று எப்போதும் போல உங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
திரெளபதி 2 மிகப் பெரிய உழைப்பு. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23 ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை பகிர்ந்த மோகன் ஜி, "திரெளபதி2 மிகப் பெரிய உழைப்பு.. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.