விஜய் ஹசாரே டிராபி: காலிறுதியில் விதர்பா, பஞ்சாப் அபார வெற்றி
- பஞ்சாப் அணி 345 ரன்கள் குவித்தது.
- மத்திய பிரதேசம் 162 ரன்னில் சுருண்டு படுதோல்வி.
விஜய் ஹசாரே டிராபியில் இன்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் (3-வது காலிறுதி) பஞ்சாப்- மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்களான ஹர்னூர் சிங் (51), பிரப்சிம்ரன் சிங் (88), அன்மோல்ப்ரீத் சிங் (70) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 5-வது வீரராக களம் இறங்கிய நேஹல் வதேராவும் அரைசதம் (38 பந்தில் 56 ரன்கள்) அடிக்க பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது.
பின்னர் 346 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மத்திய பிரதேசம் 162 ரன்னில் சுருண்டது. இதனால் 183 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. ரஜத் படிதர் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி சார்பில் சன்வீர் சிங் 3 விக்கெட்டும் குர்னூர் பிரார், ராமன்தீப் சிங், கிரிஷ் பகத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மற்றொரு காலிறுதியில் (4-வது காலிறுதி) விதர்பா- டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்பா 300 ரன்கள் குவித்தது தொடக்க வீரர் அதர்வா டைடு 62 ரன்கள் சேர்த்தார். 5-வது வீரராக களம் இறங்கிய யாஷ் ரதோட் 86 ரன்கள் விளாசினார். டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி, பிரின்ஸ் யாதவ், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி, 224 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விதர்பா அணியின் நிச்சிகெட் 4 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏற்கனவே சவுராஷ்டிரா, கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நாளை நடைபெறும் அரையிறுதியில் கர்நாடகா- விதர்பா அணிகளும், 16-ந்தேதி நடைபெறும் அரையிறுதியில் சவுராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.