நவராத்திரி ஸ்பெஷல்

சிறப்பு வாய்ந்த புரட்டாசியில் நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா

Published On 2025-09-21 08:33 IST   |   Update On 2025-09-21 08:33:00 IST
  • புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
  • சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் ‘நவராத்திரி’.

புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.

சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி'. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.

அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.

எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.

இந்த சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா மட்டுமின்றி, பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாகவும் புரட்டாசி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

விநாயகர் விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம்' என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

மகாலட்சுமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.

அமுக்தாபரண விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.

ஜேஷ்டா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று, ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.

சஷ்டி - லலிதா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.

கபிலா சஷ்டி விரதம்

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.

Tags:    

Similar News