குழந்தை பராமரிப்பு

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்

Update: 2023-01-24 04:41 GMT
  • குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
  • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது.

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் காணப்பட்டாலும் பெண்களுக்கான உரிமைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கடவுளாக கருதும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அதிகரித்து வருவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. பெருகி வரும் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளும் இந்த நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதே. இவ்வாறு பல சமூக சிக்கல்களுக்கு இடையேயும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் நிலை வளர்ச்சி அடைய பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். குறிப்பாக குழந்தை திருமணம் போன்ற நிகழ்வுகள் முற்றிலும் இல்லாமல் போக வேண்டும். இதற்காக அரசும் சட்டம் இயற்றி உள்ளது. அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்கு உரியவர்களே என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கவும், 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும், குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.

மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது. இந்த நிலை மாறி, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, சம உரிமை, கல்வி என அனைத்தும் கிடைக்கப் பெறும் போது சமூகத்தில் பெண்களின் நிலை உயரும்.

இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 2008-ம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜனவரி 24-ந் தேதியை (இன்று) தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News