குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?

Update: 2022-06-18 06:22 GMT
  • குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம்.
  • மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும்.

அழகான கையெழுத்து குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. சரளமாக வாசிப்பதற்கு உதவுகிறது. காட்சி உணர்வை செயல்படுத்துகிறது. மதிப்பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம்.

முதலில் குழந்தைகள் எந்தெந்த விரல்களைப் பயன்படுத்தி எழுதுகோல்களைப் பிடித்து எழுதுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். சிலர் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலையும், ஒரு சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் பயன்படுத்தி எழுதுவார்கள். இதனைக் கண்டறிந்த பின்பு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல எளிமையாகக் கையாளும் வகையில் எடை மற்றும் தடிமன் குறைந்த எழுதுகோல்களை வழங்க வேண்டும். இதன் மூலம், எழுதும்போது அவர்களையும் அறியாமல் விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு விரல் வலி, கை வலி இல்லாமல் எழுதுவதில் கவனம் அதிகரிக்கும்.

இரண்டாவதாக, எழுத்துக்களை அதன் வரி வடிவம் (நேர்க்கோடு, படுக்கைக் கோடு, சாய்வுக் கோடு), வளைவு, சுழி போன்றவற்றை வடிவம் மாறாமல் எழுதப் பழக வேண்டும். அவ்வாறு பழகும்போதுதான் கையெழுத்து அழகாகும். இதற்கு சிறு கட்டமிடப்பட்ட குறிப்பேடு, இரட்டை வரி, நான்கு வரி குறிப்பேடு பயிற்சியே சிறந்தது. இதன் மூலம் ஒரு எண் அல்லது எழுத்து, இந்த அளவில் தான் அமைய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும்.

மூன்றாவதாக, எழுத்துக்களை முறையான அமைப்பு, வடிவத்தில் எழுதக் கற்றுக் கொண்ட பின்னர், ஒரு வரி நேர்க்கோடு இட்டக் குறிப்பேட்டில் எழுதப் பழக வேண்டும். இதன் மூலம் எழுத்துக்களின் அடிப்பகுதியை எவ்வாறு கோட்டின் மேற்புறம் அமைத்து எழுத வேண்டும்; மேல் நோக்கி மற்றும் கீழ் நோக்கி எழுத வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும்.

நான்காவதாக, எழுதும் வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரே அளவில் அமைய வேண்டும். ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது என்று அளவு மாறுபடாமல், எழுத்துக்களின் அளவிலும் கவனம் செலுத்தி எழுத வேண்டும். பயிற்சியே சிறந்த ஆசான்! எனவே மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் நிதானமாக எழுதும் சூழலிலும், 'தேர்வு' போன்று கால அவகாசம் அளித்து, வேகமாக எழுத வேண்டிய சூழலிலும் அழகாக எழுத முடியும்.

Tags:    

Similar News