கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2023 - முதல் போட்டியில் நேபாளத்தை பந்தாடிய பாகிஸ்தான்

Published On 2023-08-30 16:30 GMT   |   Update On 2023-08-30 19:24 GMT
  • பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் 149 ரன்களை விளாசினார்.
  • நேபாளம் அணியின் சோம்பால் கமி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ரன்களிலும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 151 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்களை எடுத்தார். அடுத்த வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

 

அந்த வகையில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்களை குவித்து அசத்தியது. கடின இலக்கை துரத்திய நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியது. அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார்.

துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணிக்கு சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்கள் விழுவதை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ரன்களை குவித்து தங்களது விக்கெட்டை இழந்தது.

 

இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிக ரன்களை அடிக்காமல் அவுட் ஆக, நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

Similar News