search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள் இழப்பு"

    கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். #GajaCyclone
    திருச்சி:

    கஜா புயலால் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 3½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 1 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    30 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சரிந்து அழிந்துள்ளன. 32 ஆயிரத்து 706 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. சுமார் 12 லட் சம் மரங்கள் சரிந்துள்ளன. சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் சரிந்து உள்ளன.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 54 லட்சம் பேரின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இத்தகைய வரலாறு காணாத சேதங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டது.

    கஜா புயலின் ஆக்ரோ‌ஷ தாக்குதல் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பறிகொடுத்து விட்டு பரிதவித்தப்படி இருக்கிறார்கள். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு முதலில் சுமார் 150 முகாம்களை உருவாக்கி தயார் நிலையில் இருந்தது. ஆனால் 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து உணவு, உடை, குடிநீர் உள்பட எதுவுமே இல்லாமல் நிர்க்கதியாக நின்ற சோகத்தை கண்டதும் மளமளவென தமிழக அரசு கூடுதல் நிவாரண முகாம்களை உருவாக்கியது.

    4 மாவட்டங்களிலும் சுமார் 625 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டன. இந்த முகாம்களில் முதலில் சுமார் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்தது. புயல் பாதித்த மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் சுமார் 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 97 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கடலோர பகுதி மக்கள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் என 12ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர்.

    இந்தநிலையில் சேதமான வீடுகளை தாங்களாகவே சீரமைத்து அதில் குடிபுகுந்து வருகின்றனர். இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 25 முகாம்கள் வரை செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. காலையில் தங்களது வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள், இரவு ஆகியதும் முகாம்களுக்கு வந்து தங்குகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் 300 முதல் 500 பேர் வரை தங்கியிருந்து வருகின்றனர்.

    ஆலங்குடி, கறம்பக்குடி முகாம்களில் இரவு மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதி மற்றும் உணவுகள் அரசு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



    நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு தினமும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிறைய பேர் மாற்றுத் துணி இல்லாமல் அவதிப்பட்டப்படி இருந்தனர். அத்தகையவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்எண்ணை, தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சுமார் 4 ஆயிரம் படகுகள் சேதம் அடைந்துள்ளதால் கடலில் மீன்பிடிக்க செல்ல இயலாத மீனவர்களும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் படகுகள் வாங்க நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள அனைவருக்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஓரளவு நிவாரணப் பணிகள் முடிந்த பகுதிகளில் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் சீரமைக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் வீடுகளை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள் இன்னமும் நிவாரண முகாம்களிலேயே தங்கி இருக்க வேண்டிய பரிதாபமான, நிர்ப்பந்தமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். முகாம்களில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைத்தாலும், எத்தனை நாட்களுக்குத்தான் முகாம்களிலேயே தங்கி இருப்பது என்ற சலிப்பு ஏழை-எளிய மக்களின் மனதில் நிலவுகிறது. எனவே தங்கள் வீடு மற்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து தரும்படி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிவாரண பணிகளை முழுமையாக செய்து முடிக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து புயலால் பேரழிவை சந்தித்த 4 மாவட்டங்களிலும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் குழுவை அனுப்பி உள்ளது.

    மத்தியக் குழுவினர் கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரை 4 மாவட்டங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்தனர். இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் இது குறித்து கூறுகையில், “நாங்கள் நினைத்ததை விட 4 மாவட்டங்களிலும் மிகப்பெரிய பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மக்களின் நிலையை பார்த்தபோது பரிதாபமாக உள்ளது. இதில் இருந்து மக்கள் துணிவுடன் மீள வேண்டும்” என்றார்.

    மத்திய குழுவினர் நாளை டெல்லியில் கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தயார் செய்ய உள்ளனர். இந்த வார இறுதிக்குள் புயல் பாதிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பரிந்துரை அடிப்படையில் புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்கும். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தங்கள் துயரத்தில் இருந்து மீள்வதற்காக தமிழக அரசு 100 நாள் வேலைத் திட்ட பணியை கையில் எடுத்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 573 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவர்களுக்கு தினமும் ரூ.224 வரை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களிடம் சற்று நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அத்தியாவசிய உதவிகளும் கிடைத்து விட்டால் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட்டு விட முடியும் என்று நம்புகிறார்கள்.

    புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 6980 கிராமங்கள் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. சில கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த கோரி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து உதவிகள் செய்து வருகிறார்கள்.

    இன்று (திங்கட்கிழமை) 11-வது நாளாக நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார பணிகளில் நேற்று முதல் சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மின்சார இணைப்புக் கொடுக்க முன்னுரிமை கொடுத்து இரவு- பகலாக பணிகள் நடந்து வருகின்றன.

    4 மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் போர்க்கால அடிப்படையில் மின் கம்பங்களை நடும் பணி நடந்து வருகிறது. சுமார் 23 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அருமையான ஈடுஇணையற்ற சேவையாக தங்கள் பணியை செய்து வருகிறார்கள்.

    மின் வாரிய ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்குள் ஊரகப் பகுதிகளிலும் முழுமையான மின் இணைப்பு கொடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் ஒவ்வொரு நாளும் மக்கள் கவலையில் தத்தளிக்கிறார்கள். இழந்த சொத்துக்களை மீட்க என்ன செய்வது? இருக்கும் உயிரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் புலம்புகிறார்கள்.

    அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் உதவிகள் செய்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பிறரை எதிர்பார்த்தே காலத்தை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    பல கிராமங்களில் இன்றும் மின்சாரம் வரவில்லை. மண்எண்ணை விளக்கில் பழங்கால வாழ்க்கையை வாழ வேண்டியதுள்ளதே என மக்கள் புலம்புகிறார்கள். வெளியூர்களில் இருந்து ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கொண்டு வரப்பட்டு பணக்காரர்கள் சமாளிக்கும் நிலையில் ஏழைகள் நிலை அவர்கள் வாழ்க்கையை போல வீட்டிலும் எப்போதும் இருள் சூழ்ந்து நிற்கிறது.

    பல பகுதிகளில் கிராம மக்கள் அருகில் உள்ள கண்மாய், ஊரணியில் இருந்து ஊற்றுநீரை குடிநீராகவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    உணவு தருவதற்கு யாராவது வருகிறார்களா என நிவாரண பொருட்கள் வழங்க வரும் வாகனங்களை எதிர்பார்த்து சாலை ஓரங்களில் காத்து கிடப்பவர்களை பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருகிறது.

    இன்னும் 7 நாட்களில் மின் கம்பங்கள் நடும் பணி முழுமையாக முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் சீராக 7 நாட்களுக்கு மேலாகும் என்பதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். #GajaCyclone
    கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. #Rain #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த 16-ந்தேதி கஜா புயல் கரையை கடந்தது. இதையொட்டி பலத்த காற்று வீசியது.

    இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் இடிந்து பலர் பலியாகினர். இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் முகாம்களில் பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மீண்டும் வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்தது.

    அதன்படி கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. இதில் இருந்து அவர்கள் மீள இன்றும் பல நாட்களாகும் அவல நிலை உருவாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்து மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை-திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு மின் இணைப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர்.



    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலையில் தொடர்மழை பெய்து வருவதால் பல வீடுகள் சேதமாகி இடிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மழையால் மின் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

    நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வன விலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உரு குலைந்து போய் விட்டது. அங்கு வசித்து மான்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓட்டு வீடு மறியல் மற்றும் குடிசை வீடுகளில் பெரும்பாலான மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் வீடு புயல் மற்றும் மழையால் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது. பாதுகாப்பு முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ-மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

    பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதற்கிடையே தொடர்மழை பெய்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடைபிடித்து கொண்டு மக்கள் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல குடும்பத்தினர் தூங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமா? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்னும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது. எங்களுக்கு இயற்கை மறுவாழ்வு வழங்கவிடுமா? விடாதா? என்று வேதனை அடைந்துள்ளனர். மழை நிற்காதவரை மீட்பு பணிகள் முழுமை பெறாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இயற்கையின் கையில் உள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி வரை பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நன்னிலம்- 197.3
    திருவாரூர்- 173.7
    நீடாமங்களம்- 152.8
    கும்பகோணம்- 147.3
    குடவாசல்- 136.2
    மன்னார்குடி- 114.2
    மதுக்கூர்-102.4
    நெய்வாசல்- 98.8
    திருத்துறைப்பூண்டி- 71.2
    மயிலாடுதுறை- 67.9
    மஞ்சலாறு- 61.2
    சீர்காழி- 45.6
    தஞ்சாவூர்- 45.5
    ஒரத்தநாடு- 44.8
    கொள்ளிடம்- 21.6 #Rain #DeltaDistricts
    ×