search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூதர்"

    • முதல் டி20 உலகக் கோப்பையில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் விளாசியர்.
    • கிறிஸ் கெய்ல், உசைன் போல்ட் ஆகியோரும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2024 டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமனம் செய்துள்ளது.

    2007-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்து அணிக்கு எதிரான பிராட் ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடித்து சாதனைப் படைத்தவர் யுவராஜ் சிங். மேலும், இந்திய அணி 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

    ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், அதிவேக ஓட்டப்பந்தைய வீரராக கருதப்படும் உசைன் போல்ட் ஆகியோரையும் ஐசியி தூதராக நியமனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது உள்பட டி20 உலகக் கோப்பையில் விளையாடியதில் இருந்து எனது சில அருமையான கிரிக்கெட் நினைவுகள் வந்துள்ளன, எனவே இந்த பதிப்பின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடமாகும். மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் உருவாக்கும் வைப் (vibe), உலகின் மற்ற பகுதியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் கிரிக்கெட் விரிவடைகிறது. டி20 உலகக் கோப்பை மூலம்அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மோதல் இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும், எனவே புதிய மைதானத்தில் உலகின் சிறந்த வீரர்கள் விளையாடுவதைக் காண்பது ஒரு பாக்கியம்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் 9 இடங்களில் 55 போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 29-ந்தேதி பார்படோஸில் நடக்கிறது.

    ×