search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம் ஆல்ட்மேன்"

    • ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்து கொண்டார்.
    • திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவர் முல்ஹெரின் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

    தற்போது, சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார்.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக ஒபன்ஏஐ சி.இ.ஒ.-வாக ட்விட்ச் நிறுவனர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வெளியாகும் அறிவிப்புகள் டெக் உலகில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், கடந்த ஐந்து நாட்களில் ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக பணிநீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் இன்று (நவம்பர் 22) மீண்டும் அந்நிறுவனத்தின் சி.இ.ஒ.-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றது குறித்து அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாம் ஆல்ட்மேனும் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து பதிவிட்டு இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து சத்ய நாதெல்லா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒபன்ஏஐ நிர்வாக குழுவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை வரவேற்கிறோம். நிலையான, நன்கு விவரம் அறிந்த மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு இது முதல்படி என்பதை நாங்கள் நம்புகிறோம். ஒபன்ஏஐ தலைமை பொறுப்பை ஏற்று, அதன் குறிக்கோளை அடைவதற்கு தலைமை பொறுப்பில் இருந்து முக்கிய பங்காற்றுவது குறித்து சாம், கிரெக் மற்றும் நானும் பேச்சுவார்த்தை நடத்தினோம்."

    "உறுதியான கூட்டணியை உருவாக்கி, அடுத்த தலைமுறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மதிப்புகளை எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு வழங்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

    • டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

    உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனமான ஒபன்ஏஐ, கடந்த வெள்ளிக் கிழமை (நவம்பர் 17) அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஒபன்ஏஐ நிர்வாக குழுவின் இந்த முடிவு டெக் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு டெக் உலக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே பணிநீக்க நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    அந்த வகையில், கடந்த ஞாயிற்று கிழமை வரையிலும் நிர்வாக குழு ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்த நடவடிக்கையில் உறுதியாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர ஒபன்ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு நெருங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் நிர்வாக குழுவின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

    அதில், சாம் ஆல்ட்மேனின் பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால், அனைவரும் சாம் ஆல்ட்மேனுடன் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்து கையொப்பமிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க நிர்வாக குழு ஒப்புக்கொள்வதாக நேற்று (நவம்பர் 21) தகவல்கள் வெளியாகின.

    "பிரெட் டெய்லர், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோர் அடங்கிய நிர்வாக குழு ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திரும்புவதற்கான ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறோம். இது தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்தமைக்கு நன்றிகள்," என ஒபன்ஏஐ நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

    "நான் ஒபன்ஏஐ-ஐ விரும்புகிறேன். இந்த குழு மற்றும் அதன் குறிக்கோளை ஒன்றாக வைத்துக் கொள்ள கடந்த சில நாட்களில் அனைத்தையும் செய்தேன். புதிய நிர்வாக குழு மற்றும் சத்யாவின் ஆதரவுடன், நான் ஒபன்ஏஐ-க்கு திரும்புவதில் ஆவலாக இருக்கிறேன். இத்துடன் மைக்ரோசாப்ட் உடன் பலமான கூட்டணியை உருவாக்க விரும்புகிறேன்," என்று சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ட்விட்ச் நிறுவனர் எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டார். தற்போது, ஒபன்ஏஐ தனது பழைய தலைமை செயல் அதிகாரியை மீண்டும் அழைத்துக் கொண்டிருப்பதால், எம்மெட் ஷியர் நியமிக்கப்பட்டது குறித்து ஒபன்ஏஐ சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம்.
    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் கருத்து மோதல்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. இவர் ஒபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி கொண்டே வருகிறது. இவரை ஒபன்ஏஐ நிறுவனம் எதற்காக திடீரென பணிநீக்கம் செய்தது என்ற காரணம் தொர்ந்து மர்மமாகவே உள்ளது.

    பணிநீக்கம் செய்யப்பட்டதும் மைக்ரோசஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனை வரவேற்க விரும்புகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கருத்து தெரிவித்து இருந்தார். இவர் மட்டுமின்றி டெக் உலகின் முன்னணி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் சாம் ஆல்ட்மேன் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், "மேம்பட்ட, அதிநவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் ரிஸ்க் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக குழு இத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணத்தை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருந்தார். எனினும் ஒபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நிறுவனத்தில் தனது பங்குகள் அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
    • தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.

    தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.

    இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். 

    ×