search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சி.இ.ஒ. திடீர் பணிநீக்கம்.. இணை நிறுவனர் ராஜினாமா.. ஒபன்ஏஐ-ல என்னதான் நடக்குது?
    X

    சி.இ.ஒ. திடீர் பணிநீக்கம்.. இணை நிறுவனர் ராஜினாமா.. ஒபன்ஏஐ-ல என்னதான் நடக்குது?

    • சேவைகளை அவசர அவசரமாக தயார் செய்து வெளியிட்டன.
    • தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிப்பு.

    தொழில்நுட்ப உலகில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒபன்ஏஐ. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சேவை டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்குவதில் பல நிறுவனங்களும் ஈடுபட துவங்கின. முன்னணி டெக் பிராண்டுகள் ஏற்கனவே உருவாக்கி வந்த சேவைகளை அவசர அவசரமாகவும் தயார் செய்து வெளியிட்டன.

    இந்த நிலையில், தொழில்நுட்ப உலகையே அதிரச் செய்யும் அறிவிப்பு ஒன்றை ஒபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதோடு ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் தெளிவற்ற நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அதன் தலைமை செயல் அதிகாரி குறித்து இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பதும், திடீரென பதவியில் இருந்து விடுவிப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒபன்ஏஐ நிர்வாக குழு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தை ஆல்ட்மேன் செய்திருக்க வேண்டும், அல்லது ஆல்ட்மேன் மற்றும் நிர்வாக குழு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×