search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் செல்ல தடை"

    • ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

    மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இன்று முதல் அடுத்த சில நாட்கள் வரை ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தென்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

    மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ராமேசுவரத்தில் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மாறுபாடு காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×