search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஜி பொன்மாணிக்கவேல்"

    தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். #IGPonManickavel #PonManickavel
    சென்னை:

    போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிந்தன. அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்டார். அவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    அதே நேரத்தில் தமிழக அரசு, சிலை கடத்தல் தொடர்பான தகவல்களை அவர் அரசிடம் சரியாக தெரிவிப்பது இல்லை என்று குற்றம் சாட்டியது. இதன் காரணமாக அவர் ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார்.

    இருப்பினும் கோர்ட்டு தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது. இதனால் 2 பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

    தமிழக போலீசில் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதிலும் திறமையாக செயல்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.


    டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவு பிரிவிலும் பணியாற்றியுள்ளார். சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையராகவும் இருந்துள்ளார். தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது நாளை தெரியும்.

    இந்த நிலையில் சென்னை எழும்பூரில் பொன் மாணிக்கவேலுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    ரெயில்வேயில் வழிப்பறியில் ஈடுபட்டால் 14 ஆண்டு வரையில் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன. சாட்சிகள் இல்லாத நிலையில் குற்றவாளிகளிடம் வாக்கு மூலம் வாங்கினாலே செல்லுபடியாகும், அதனை யாரும் செய்வது இல்லை. கீழ்நிலை காவலர்களுக்கு அது சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

    குற்றவாளிகளுக்கு எதிராக 9 எம்.எம். துப்பாக்கியை காட்டுவதை விட போலீசார் தங்களது செல்போனில் அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவாக பதிவு செய்வது நல்லது. நல்லது, கெட்டது இரண்டையும் ஏற்கும் மனநிலைக்கு போலீசார் வரவேண்டும். சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்.ஐ.ஆர். போடுவதற்கு பயப்படக் கூடாது.

    இவ்வாறு பொன் மாணிக்கவேல் பேசினார். #IGPonManickavel #PonManickavel
    தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #RanvirShah
    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவரது தோழியும் பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ஏராளமான சாமி சிலைகள், பழமையான தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஏற்கனவே கைதான தொழில் அதிபர் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா சிலைகளை வாங்கி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோர்ட்டு அனுமதி பெற்று அதற்கான ஆதாரத்தை காட்டி ரன்வீர்ஷா வீட்டிலும், கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை அருகே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான 2 பண்ணை வீடுகள் உள்ளன. அங்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரன்வீர்ஷா அங்கு சிலைகளை பதுக்கி இருந்தது தெரிய வந்தது. அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவலை கும்பகோணம் கோர்ட்டிலும் போலீசார் தெரிவித்தார்கள். மொத்தம் 244 சிலைகள் மற்றும் கல் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாகவே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2 வாரமாக எந்தவித சோதனையிலும் ஈடுபடாமல் இருந்தனர். எனவே ரன்வீர்ஷா வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்ததாக கருதப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பி.எஸ். அப்பேரல்ஸ் எனப்படும் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நந்தி, கருடன் உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஏற்கனவே தங்களிடம் உள்ள சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர்ஷா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் கூறுகையில், “மிகவும் தொன்மையான மற்றும் பழமையான சிலைகளை வாங்கி வைத்திருப்பது குற்றம். அதை விற்பனை செய்வதும் குற்றம் என்று தெரிவித்து இருந்தனர்.

    எனவே பழமையான சிலைகள் யார்-யாரிடம் வாங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய இன்று சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் அது தொடர்பான ஆவணங்கள் சிக்குமா? என்ற கோணத்திலும் சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது சாமி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


    இன்று நடந்த சோதனை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக ரன்வீர்ஷா தரப்பு வக்கீல் தங்கராசு கூறுகையில், “தேர் பவனி வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தேர் பவனி வாகனங்கள் தொன்மையானது அல்ல என்றார். #RanvirShah

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை நடத்தினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரில் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் இது தொடர்பான வழக்குகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கொள்ளைபோன சாமி சிலைகளை மீட்டார். இதில் நாறும்பூநாதர் கோவிலுக்கு சொந்தமான 9 சிலைகளும் மீட்கப்பட்டது.

    ஆனால் இந்த ஐம்பொன் சிலைகளில் தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் அதன் உண்மை தன்மைகள் பற்றி அறிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று பழவூருக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் கோவில் நிர்வாகிகளிடமும், ஊர் முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

    சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான திருவையாறு அரண்மனையில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று ஆய்வு நடத்தினார்.
    திருவையாறு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா, வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பழங்காலத்தை சேர்ந்த வெண்கல சிலைகள், கலை நயமிக்க கல் தூண்கள் உள்பட 89 கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைகள் தஞ்சை மாவட்டம் திருவையாறிலும், திருவாரூரிலும் உள்ளன. இதில் திருவையாறில் உள்ள அரண்மனை காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளது. இது மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு ரன்வீர்ஷா விலைக்கு வாங்கினார். இங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் “ப்ரக்ருதி பவுண்டேசன்” சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    சென்னையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் பழங்காலத்தை சேர்ந்த கலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து திருவையாறில் உள்ள அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைக்கு நேற்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர்.

    அப்போது அரண்மனைக்குள் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். முன்னதாக அதிகாரிகள் அரண்மனையின் பெண் காவலாளியிடம், சிலைகளை அரண்மனைக்கு கொண்டு வந்தார்களா? இங்கிருந்து எதையாவது எடுத்து சென்றார்களா? என விசாரணை நடத்தினர். அதற்கு பதில் அளித்த காவலாளி, சிலைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என பதில் அளித்தார்.

    அரை மணிநேரம் ஆய்வு பணி நீடித்தது. அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவையாறு அரண்மனைக்கு திடீரென வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொழில் அதிபரான ரன்வீர்ஷா பழங்கால அரண்மனைகளை வாங்கி பராமரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவருக்கு சொந்தமான அரண்மனைகள் திருவாரூர், ஊட்டி ஆகிய இடங்களிலும் உள்ளன.

    கோர்ட்டில் முறையான அனுமதி பெற்று திருவையாறு அரண்மனையில் மீண்டும் ஆய்வு நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் திருடப்பட்ட தங்கம்-வெள்ளி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன என்றும், அவற்றை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.
    சிலை கடத்தல் தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ஏராளமான சிலைகள் திருடப்பட்டு, பின்னர் கடத்திச் செல்லப்பட்டு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்திச் சென்று விற்கப்பட்ட ராஜராஜ சோழன் ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்து ராணி லோகமாதேவி ஐம்பொன் சிலையும் குஜராத் மாநிலத்தில் உள்ள மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மேலும் பல சிலைகள் திருடப்பட்ட விவரம் கண்டறியப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார், 2 உமாபரமேஸ்வரி சிலைகளை தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்துள்ளார். ராஜராஜ சோழனின் தந்தை பொன் மாளிகை துஞ்சின தேவர் சிலை, ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவியின் சிலை போன்றவையும் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளுக்கும் தினமும் அபிஷேகம் செய்ய ராஜராஜ சோழன் கட்டளையிட்டு இருந்தார். அதன்படி, இந்த இரண்டு சிலைகளுக்கும் தினமும் பெரிய கோவிலில் அபிஷேகம் நடக்குமாம்.

    ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி, திருக்கோவிலூர் மலையமான் சிற்றரசரின் மகள் ஆவார். ராஜராஜ சோழனின் தளபதி 3 அடி உயரத்தில் அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த சிலையையும் காணவில்லை. திருட்டு போயுள்ளது.

    மேலும் ராஜராஜ சோழன் 450 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட கொல்கைதேவர் சிலையையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்துள்ளார். மேலும் வெள்ளியினால் செய்யப்பட்ட 4 வாசுதேவர் சிலைகளும், 365 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சேத்திரபாலர் சிலையும் தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இரண்டு தங்கத்திலான சிலைகளும், 4 வெள்ளி சிலைகளும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு திருடப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இந்த சிலைகள் தஞ்சை கபிஸ்தலத்திற்கு அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி என்பவர் மூலமாக கோடிக்கணக்கில் விற்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விற்ற பணத்தில் சென்னை வேப்பேரியில் கூட 7 கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதுபற்றியெல்லாம் புலன் விசாரணை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் இன்னும் கைது செய்யவில்லை.

    இதுபோல தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×