search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin sterlite plant"

    தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விடமாட்டோம் என காயம் அடைந்த பாதிரியார் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தின் போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகளை திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பொதுச் செயலாளர் தண்டபாணி, தென் மண்டல அமைப்பு செயலாளர் சந்திர சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteplant #protest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது எனவும், ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தை தொடங்கினர்.

    அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பி ஆரப்பாட்டம் செய்து வ‌ந்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக அ.குமரெட்டியாபுரம் மக்களை சந்தித்து அவர்களோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கியதால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.

    இதையடுத்து போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த‌னர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் போராட்டக்குழுவினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒரு தரப்பினர் கலந்துகொண்டார்கள். இதையடுத்து கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2 இடங்களில் போராட்டம் நடைபெறும் நிலை ஏற்பட்டு உள்ளதால் பரபரப்பான சூழல் உருவானது.

    இதையடுத்து தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் வெங்கடேஷ் நேற்று மாலை அறிவித்தார். இந்த தடை உத்தரவு நேற்றிரவு 10 மணி முதல் நாளை (23-ந்தேதி) காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.



    கலவரம் ஏற்பட்டால் தடுக்க கூடிய வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    மேலும் முற்றுகை போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தக்கூடியதாக கருதப்படும் சுமார் 70 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீளவிட்டான் பகுதியில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

    அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள். அதேவேளையில் மற்றொருதரப்பினர் தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டனர்.

    தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.வினர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அண்ணாநகரில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அ.ம.மு.க.வினர் மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமையிலும் ஊர்வலமாக புறப்பட்டார்கள்.

    இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது. #sterliteplant #protest #BanSterlite #TalkAboutSterlite
    ×