search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்களிப்பு"

    ஓ.என்.ஜி.சி. சமூக பங்களிப்பு நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட வன உயிரின காப்பாளர் அலுவலக கட்டிடத்தினையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலந்தரவை ஊராட்சி தெற்கூர் கிராமத்தில் ரூ.32.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தினையும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் திறந்து வைத்தார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் சுந்தரமுடையன் மற்றும் நாகாச்சி கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி தோட்டக்கலை பண்ணையின் பயன்பாட்டிற்கான வாகனத்தையும், உச்சிப்புளி, தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஆர். எஸ். மங்கலம், தொண்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.15.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரங்ணகளை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டரிடம் வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலத்தில் கடல் பசு உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக வனத்துறையின் ராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம் காப்பாளர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் “ உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் போன்களுக்கான ஆன்ட்ராய்டு செயலி ‘காம்பா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கடல் பசுவினை பாதுகாக்க ‘‘சேவ்டுகோங்’’ என்ற ஆன்ட்ராய்டு செயலியை கலெக்டர் சங்கர் லால் குமாவத்  தொடங்கி வைத்தார்.

    இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி, மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுக்களை உயிருடன் மீட்டு, மீண்டும் கடலில் விடும் காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கலாம்.அவ்வாறு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் பசுக்களை பாதுகாக்க வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக சன்மானம் மற்றும் பரிசுத்தொகை பெறலாம். 

    கடல் பசுக்களை பாதுகாக்க, மிகப்பெரிய அளவில் மீனவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் பெறுவதற்கு இந்த மொபைல் செயலி பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சுரேஷ், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரதாப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் யாதவா, அனுராக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×