search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GOVT.SCHOOL"

    • சுகாதாரமான குடிநீர், பள்ளி வளாகம் தூய்மை, கழிவறை வசதிகளுடன் காணப்படுவதால் இடுவாய் பஞ்சாயத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கடந்த 2020 -21ம் கல்வியாண்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளி வீதம், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெள்ள கோவில் - முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உடுமலை - ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

    இது குறித்து பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி கூறியதாவது:- கடந்த 2002ல் இப்பள்ளி துவங்கிய போது முதல் தலைமையாசிரியராக நான் பணியாற்ற துவங்கினேன். அப்போது 30 குழந்தைகள் . மரத்தடியில் தான் பாடம் நடக்கும். போதிய வகுப்பறைகள் இருக்காது. இன்று 430 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    தொடர்ந்து எஸ்.எஸ்.ஏ., பொதுமக்கள் மற்றும் மங்கலம் மேற்கு ரோட்டரி ஆகியோரின் நிதிஉதவியால் பல கட்டடங்கள் எழுப்ப மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. சுகாதாரமான குடிநீர், பள்ளி வளாகம் தூய்மை, கழிவறை வசதிகளுடன் காணப்படுவதால் இடுவாய் பஞ்சாயத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.

    பள்ளியில் 200 மரங்கள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. ஒரு ஏக்கர் 10 சென்ட் முழுவதும் காம்பவுண்ட் சுவர் உண்டு. அனைவரது கூட்டு முயற்சியே விருதுக்கு காரணம். இவ்விருது கிராமப்புற பள்ளிகளுக்கு புது உத்வேகத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி மலர் அரசு கூறுகையில், பொதுமக்கள், பெற்றோர் ஒத்துழைப்பால் இப்பள்ளிக்கு இப்பெருமை கிடைத்துள்ளது. 382 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். முன்னாள் மாணவர்கள் பள்ளி வகுப்பறை முழுவதும் டைல்ஸ் ஒட்டித்தந்தனர்.

    உடைந்த ஓடுகளை மாற்றித்தந்தனர். மாணவிகள் வசதிக்காக இன்சிலேட்டர் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையிலும் தன்னிறைவு அடைந்துள்ளதால் இவ்விருது சாத்தியமாகியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி இரண்டும் கற்பிக்கிறோம் என்றார்.

    • விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
    • அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்,

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஒ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -

    தமிழகம் முழுவதும் 2021-22 ம் ஆண்டுக்கான பொதுத் தோ்வுகள் முடிவடைந்து விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.இதைத் தொடா்ந்து, 2022- 23 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

    இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவா்கள் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாா் கல்லூரிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை சான்றிதழ்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இந்தச் சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் கலை, அறிவியல், கணினி போன்ற பாடப் பிரிவுகளில் சேர அனுமதிக்க வேண்டும்.அதேபோல, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம் பள்ளி நம் பெருமை மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை மற்றும் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை உள்ளிட்ட அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரசு பள்ளி ஆரிசியர்கள் பேரணியாக சென்றனர்.

    மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முடிவடைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    • தலைமை ஆசிரியா் அசத்தல்
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா்.

    கோவை,

    கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.

    கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி, ஆசிரியா் வைரவபாண்டி ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.இந்த பள்ளி அமைந்துள்ள கிராமத்தின் மொத்த மக்கள்தொகையே 500-க்குள்தான் உள்ளது. கிராம மக்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளா்களாகவும் உள்ளனா்.அருகில் உள்ள கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் இருப்பதால், மேட்டுலட்சுமிநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் சேருகின்றனா். இந்த பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன.

    இங்கு தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவா்கள் உயா்நிலைக் கல்விக்காக அக்கநாயக்கன் பாளையத்துக்கும், மேல்நிலை கல்விக்காக லட்சுமி நாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்கின்றனா்.இந்நிலையில், இந்த பள்ளியின் மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறாா் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி. அதன்படி 2022-2023 -ம் கல்வியாண்டில் சேரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கிராமத்தில் விநியோகித்து வருகிறாா்.

    இது குறித்து அவா் கூறும்போது,கடந்த ஆண்டும் இதுபோன்ற பரிசுத் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி 3 மாணவா்கள் சோ்ந்தனா். அவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை எனது ஊதியத்தில் இருந்து வழங்கினேன். இந்த ஆண்டு எத்தனை மாணவா்கள் சோ்ந்தாலும் அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளேன்.

    எங்கள் பள்ளி அமைதியான சூழலில், மரங்கள் நிறைந்த வளாகம், பரந்த விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட வசதிகள் இருக்கக் கூடிய பள்ளியாக உள்ளது. இதைக் கூறி மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பிரசாரத்தை நடத்தி வருகிறேன். வரும் 13-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. அன்று முதல் மாணவா்கள் சோ்க்கப்படுவாா்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றாா்.

    ×