search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fundamental rights"

    • பள்ளி சட்ட கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் காவலர் தங்கமயில் காவலன் செயலி பயன் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி சட்ட கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    காவலன் செயலி

    வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை தமிழ்வாணி, செங்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்சுந்தர், வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தமிழாசிரியா் பிச்சையா வரவேற்று பேசினார்.

    பின்னா் வழக்கறிஞா்கள் முத்துக்குமாரசாமி, ஆதிபாலசுப்பிரமணியன், சுடர்முத்தையா ஆகியோர் மகளிருக்கான சட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினா். அதனைத் தொடா்ந்து பெண் காவலர் தங்கமயில் காவலன் செயலி பயன் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினார்.

    பின்னா் முகாமில் நீதிபதி எம்.சுனில்ராஜா பேசியதாவது:-

    அடிப்படை வசதி

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மொத்தம் 6 அடிப்படை உரிமைகள் உள்ளது. அதேபோல் அடிப்படை கடமைகள் எத்தனை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? எங்கெல்லாம் அடிப்படை உரிமைகள் உள்ளதோ அங்கெல்லாம் அடிப்படை கடமையும் உள்ளது.

    எப்படி என்றால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று தலை, மற்றொன்று பூ. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் இருந்தால் அந்த நாணயம் செல்லாத நாணயமாக ஆகிவிடுகிறது. அதேபோல்தான் உரிமை, கடமை என இரண்டு பக்கங்கள் கொண்டதுதான் நமது வாழ்க்கை உரிமை மறுக்கும்போதும் கடமையை செய்ய தவறும்போது பிரச்சனை உண்டாகிறது.

    குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி அடிப்படை உரிமை. கற்று கொடுப்பது ஆசிரியா்களின் கடமை. இந்த இரண்டில் ஒன்று தடைபடும்போது பிரச்சனைக்கான வழி பிறக்கிறது. எனவே மாணவிகள் தங்களது தற்போதைய முதற்கடமை கல்வி கற்பது மட்டுமே அதை திறம்பட செய்தல் வேண்டும். அதற்காக பெற்றோர், ஆசிரியா்களின் நல் அறிவுரைகளை கேட்டு வாழ்வில் உயர்ந்த இடத்திற்கும் உயர் பதவிகளுக்கும் வர தங்களை தயார் செய்து கொள்ளவும்.

    மேலும் இந்த முகாமின் மூலம் தாங்கள் அறிந்த சட்ட விழிப்புணா்வுகளை மற்றவா்களிடம் எடுத்துக்கூறி அவர்களது வாழ்வில் ஏற்பட்டுள்ள சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

    எங்கள் நீதிமன்ற அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நேரில் சென்று சட்டம் சார்ந்த சட்டம் சாராத அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு தேடிக்கொள்ளலாம். மேலும் கணவரை இழந்த பெண்களுக்கு இழப்பீடு, விபத்து இழப்பீடு, குடும்ப அட்டை, மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க உதவி, நீண்ட காலமாக தீர்வு இல்லாமல் உள்ள வழக்குகள் விரைவில் தீர்த்து வைத்து தரப்படும் இன்னும் பல சேவைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடிக்கொள்ளவும்.

    மேலும் 1098 என்ற இலவச தொலைபேசி சேவை மூலம் குழந்தை திருமணம் குறித்த தகவல்களை தெரிவித்தால் அந்த திருமணம் தடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். எனவே மாணவிகள் இந்த தகவல்களை மற்றவா்களுக்கு எடுத்து கூறிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் சங்க இணைச் செயலாளா் கார்த்திகைராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் சக்திவேல், ஆசாத், அருண், வெங்கடேஷ், மாலதி, சிதம்பரம், நித்தியானந்தன், வீரபாண்டியன், சிவசுந்தரவேலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் சட்டகல்வி மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பிரேமா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

    ×