search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers protest in delhi"

    டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க மகாராஷ்டிராவில் இருந்து வந்த விவசாயி இன்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.

    நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளவர்கள் டெல்லியில் உள்ள பல பகுதிகளில் தங்கியுள்ளனர்.


    அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒரு குழுவினர் பர்கஞ்ச் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவன் கட்டிடத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில், இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று தவறி கீழே விழுந்த ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் கிரண் சன்ட்டப்பா(52) என்றும் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். #farmersloans #RahulGandhi #Delhifarmerprotest
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் வழியில் தடுத்து நிறுத்தினர். எனினும், பாராளுமன்றத்துக்கு சற்று தூரத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வருகிறது.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இங்குவந்து உரையாற்றிக் கொண்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ‘ராம் ராம்’ என்று உச்சரித்தபடி ராமர் கோவில் என்ற ஒரே ஆயுதத்தை மோடியும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவையும் உயர்த்திப் பிடிக்க தொடங்கியுள்ளதாகவும்,  விவசாயிகளைப்பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.


    தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் சிவாமிநாதன் குழு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.

    அவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவோம். விவசாயிகளுக்கான போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், வெற்று வாக்குறுதிகளை தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை. இப்போது விவசாயிகளின் நிலைமையை பாருங்கள்.

    விவசாயிகளின் நல்ல எதிர்காலத்துக்காக நாங்கள் எல்லாம் அவர்களுடன் துணையாக இருப்போம். விவசாயிகளையும், இளைஞர்களையும் மத்திய அரசு வஞ்சித்தால் இந்த ஆட்சியை அவர்கள் தூக்கி எறிவார்கள்.

    கடன் தள்ளுபடியை அரசிடம் இருந்து விவசாயிகள் பரிசாக எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குண்டான உரிமைக்காகதான் அவர்கள் போராடி வருகின்றனர்.

    தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால் விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்தாக வேண்டும். விவசாயிகளின் சக்தியால்தான் இந்த தேசம் உருவாகியுள்ளது. நீங்கள் அச்சப்பட வேண்டாம். நாங்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம் என்பதை இந்த நாட்டில் உள்ள விவசாய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்று கூறினார். #farmersloans #RahulGandhi #Delhifarmerprotest
    டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்.பி. டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #FarmersProtest #Kanimozhi #PMmodi
    சென்னை:

    பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று ஏற்கனவே அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இப்போது அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதில் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட பலர் அரை நிர்வாணமாக ஊர்வலத்தில் கோ‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

    இதுபற்றி கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-


    தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்தியபோதே பிரதமர் ஓடிவந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.

    விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.  #FarmersProtest #Kanimozhi #PMModi
    நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TNFarmersProtest #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்ட குழுவில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநில விவசாயிகளும், 4 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 207 விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் என மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

    நேற்று இவர்கள் டெல்லியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள் இன்று டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்தனர்.

    இதற்காக தமிழக விவசாயிகள் 25 பெண்கள் உள்பட 1,300 பேரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 8 மணிமுதல் திரண்டனர். அதேபோன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் யோகேந்திர யாதவ், தலைமையிலும் மற்ற விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் என லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்தனர்.

    எங்கு பார்த்தாலும் பச்சை துண்டுகளுடன் விவசாயிகள் தலைகளாக காணப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் 10 மணிக்குள் மத்திய அரசு வந்து கோரிக்கை குறித்து, உறுதி கூறி, நிறைவேற்ற வாக்குறுதி தராவிட்டால் பேரணியில் முழு நிர்வாணமாக செல்வோம் என அறிவித்திருந்ததால் பரபரப்பாக இருந்தது. பேரணி இடத்தில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீசார் மற்றும் மத்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


    நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு டெல்லி ஆம் ஆத்மி எம். எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்கள் நேரடியாக வந்து உணவு வழங்கினர். இன்று காலையும் பேரணி தொடங்கும் முன்பு விவசாயிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

    ராம்லீலா மைதானமே பரபரப்புடன் காணப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது.

    தமிழக விவசாயிகள் நிர்வாணமாக பாராளுமன்றம் நோக்கி செல்வோம் என அறிவித்திருந்ததால் டெல்லி போலீசார் அவர்கள் இடத்தில் கூடுதல் போலீசாரை நிறுத்தி இருந்தனர்.

    இதுகுறித்து பேரணியில் நின்ற திருச்சி அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் திரள வைத்துள்ளது.

    தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் வரை 3 கி.மீட்டர் நிர்வாணமாக செல்ல உள்ளோம். விவசாயிகளின் வேட்டி, சட்டையை ஏற்கனவே மத்திய அரசு கழற்றிவிட்டது. இப்போது எங்கள் கோவணத்தையும் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாததன் மூலம் கழற்றிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் செல்ல உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNFarmersProtest #FarmersProtest
    விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், புயல் சேதத்தால் அழிந்து விட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு விரைந்து வழங்க வேண்டும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,

    அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் இன்றும், நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக கடந்த 27-ந்தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவர்கள், அங்கிருந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை டெல்லி சென்றடைந்தனர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள் ரெயிலை மறித்தனர். என்ஜின் மீது ஏறி நின்ற அவர்கள் தண்டவாளத்திலும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக விவசாயிகள் கழுத்தில் மண்டை ஓடு, எலும்பு மாலை அணிந்து அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த காட்சி.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் கையில் மண்டை ஓடு, கழுத்தில் எலும்பு மாலை அணிந்தவாறு அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். இன்றும், நாளையும் அவர்கள் ராம்லீலா மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில செயலாளர்கள் வந்தவாசி தினேஷ், முருகன், கடலூர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் சென்னை மாவட்டம் ஜோதிமுருகன், விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் சண்முகம், கோவை மாவட்டம் படிஸ்வரன், திருச்சி மாவட்டம் பொன்னுசாமி, கரூர் மாவட்டம் சரவணன் , திருவள்ளூர் மாவட்டம் நாககுமார், தஞ்சாவூர் மாவட்டம் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே டெல்லியில் திருச்சி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். பாராளுமன்றம் முன்பு ஆடைகள் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் தமிழக விவசாயிகளால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest
    ×