search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Volunteers"

    மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. திமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். #DMK #IPeriyasamy
    பரமக்குடி:

    பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி முகவர்களிடம் ஆலோசனை செய்வதற்காக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அவர்கள் நகரில் சேதுபதி நகர், காட்டுப் பரமக்குடி, சந்தைக்கடை, சுப்பிரமணியசுவாமி தெரு உள்பட பல்வேறு வார்டுகளில் ஆலோசனை வழங்கினர்.

    ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுப.த.சம்பத், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிகளின் போது ரூ. 616 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    உழவர் சந்தை, பசும்பொன் தேவருக்கு நினைவு மண்டபம், சேது சமுத்திரத் திட்டம் என நல்ல திட்டங்களையும் தி.மு.க. செயல்படுத்தியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அ.திமு.க. அரசால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். தி.மு.க. அமோக வெற்றி பெறும். கடந்த தேர்தல்களைப் போல் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தடுக்கப்படும்.

    அரசியலில் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்பது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் மத்தியில் ஆளும் மோடியின் ரிமோட் ஆட்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து, வக்கீல் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன். துரைச்சாமி, ஒன்றிய செயலாளர் போகலூர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #IPeriyasamy
    கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Karunanidhi #DMK
    பெரியபாளையம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதனை மறுத்துவிட்டது.

    இந்த செய்தியை கேட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள திருநிலை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராஜ் (வயது 32) மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜ், நேற்று காலை திருநிலை கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே, அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரான முருகேசன் (45) கருணாநிதி மரணம் குறித்த செய்தியை கேட்டதும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார். மீளா துயரத்தில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரத்தை அடுத்த எலவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா என்ற வெள்ளகுட்டி (45). தி.மு.க. உறுப்பினர். கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறா கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (47), மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (70), மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாதஸ்வர வித்வானான ராஜேந்திரன் (50), மயிலாடுதுறை மேலபெரம்பூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (56), மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (70) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதன் (74), புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுசீலா (60) மற்றும் ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் மனைவி பாப்பாம்மாள் (57) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிர் இழந்தனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (65), நேற்று முன்தினம் மாலை கருணாநிதி இறந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு குருநகரை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் சுப்பம்மாள் (60), வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியை அடுத்த குரும்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டரான கருப்பையா (55) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தனர்.

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின்பஜார் தெருவை சேர்ந்த சுலைமான் (65), போடியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கோவிந்தன் (55) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    விழுப்புரம் முத்தோப்பு வார்டு தி.மு.க. பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான குமரவேல் ஆகிய 2 பேரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    அதேபோல் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி நிர்வாகியான பூவாடு கிராமத்தை சேர்ந்த பெருமா (60) என்பவர் நேற்று முன்தினம் மாலை கருணாநிதி உயிர் இழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மயங்கி விழுந்து இறந்தார்.

    சேலம் தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (45). தி.மு.க. தொண்டரான இவர் அழகாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    எடப்பாடி கக்சுபள்ளியை சேர்ந்த லட்சுமணன் (55), பூலாம்பட்டி சந்தை பேட்டையை சேர்ந்த தி.மு.க. தொண்டரான வெங்கடாசலம் (60) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கங்கதேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிக்கதாய்ப்பா (80) கருணாநிதி மறைவு செய்தி அறிந்ததும் அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுபட்டி கொட்டாவூரை சேர்ந்த சண்முகம் (55) கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (65), தி.மு.க. கிளை உறுப்பினராக இருந்தார். நேற்று முன்தினம் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த சின்னையா அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராமன் (50), திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்த பழனியம்மாள் (75) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிர் இழந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெள்ளியம்பாளையத்தை சேர்ந்த குருசாமி (55) காங்கேயம் வடக்கு ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி 5-வது வார்டு தி.மு.க. செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு, கவலையுடன் தூங்க சென்றார். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவர் இறந்தார்.

    நெல்லை டவுனை சேர்ந்த குருநாதன் என்ற குருசாமி (49), நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தை சேர்ந்த சண்முகையா (68), அதே ஊரை சேர்ந்த வேலுசாமி (68) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து இறந்தனர்.

    மதுரையை சேர்ந்தவர் அழகுராஜா (27), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த நாகராஜ் (34), அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (63), எர்ரம்பட்டியை சேர்ந்த அலங்கார கவுண்டர் (65), மதுரை பெருங்குடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கணபதியின் மனைவி சந்திரா (52) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

    குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சி 17-வது வார்டு செயலாளராக இருந்தவர் அலெக்சாண்டர் (66). தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு மயங்கி விழுந்து இறந்தார். 
    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையில் தகராறு செய்து, ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இதில் புகாருக்கு ஆளான தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். #DMK #ChennaiHotel #Attack
    பூந்தமல்லி:

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.

    அவரோ, “நேரம் ஆகிவிட்டதால் உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் “நான் லோக்கல் ஆளு எனக்கே பிரியாணி இல்லையா?” என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார்.



    அப்போது கடை ஊழியர்கள் 2 பேர், “ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் புடை சூழ தனக்கே உரிய ‘பாக்சிங்’ (குத்துச்சண்டை) பாணியில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.

    இதில் பிரகாசின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை தடுக்க வந்த ஊழியர்களையும் அவரது ஆதரவாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களில் ஒருவரை கடைக்கு வெளியே இழுத்து சென்றும், மற்றொரு ஊழியரை கடைக்குள்ளும் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறி கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம், கடையில் பொருத்தப்பட்டு உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) பதிவாகி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ், கருணாநிதி (33), நாகராஜ் (55) ஆகிய 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் பாக்சர் யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பாக்சர் யுவராஜ் தாக்குதல் நடத்திய பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்று, விழாக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறபோது, தான் உள்ளூர்காரர் என்பதால் கேட்கிற விலைக்கு பிரியாணி தர வேண்டும் என்றும், நண்பர்களுடன் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிடுவார் என்றும், கடைக்கு முன்னால் தனது காரை நிறுத்தி இடையூறு செய்து வந்து உள்ளார் என்றும், இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகரன் ஆகியோர் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையுடன் தி.மு.க. தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    ×