search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியாணி கடையில் தகராறு செய்து ஊழியர்கள்மீது தாக்குதல் - தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
    X

    பிரியாணி கடையில் தகராறு செய்து ஊழியர்கள்மீது தாக்குதல் - தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையில் தகராறு செய்து, ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இதில் புகாருக்கு ஆளான தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். #DMK #ChennaiHotel #Attack
    பூந்தமல்லி:

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.

    அவரோ, “நேரம் ஆகிவிட்டதால் உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் “நான் லோக்கல் ஆளு எனக்கே பிரியாணி இல்லையா?” என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார்.



    அப்போது கடை ஊழியர்கள் 2 பேர், “ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் புடை சூழ தனக்கே உரிய ‘பாக்சிங்’ (குத்துச்சண்டை) பாணியில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.

    இதில் பிரகாசின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை தடுக்க வந்த ஊழியர்களையும் அவரது ஆதரவாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களில் ஒருவரை கடைக்கு வெளியே இழுத்து சென்றும், மற்றொரு ஊழியரை கடைக்குள்ளும் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறி கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம், கடையில் பொருத்தப்பட்டு உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) பதிவாகி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ், கருணாநிதி (33), நாகராஜ் (55) ஆகிய 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் பாக்சர் யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பாக்சர் யுவராஜ் தாக்குதல் நடத்திய பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்று, விழாக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறபோது, தான் உள்ளூர்காரர் என்பதால் கேட்கிற விலைக்கு பிரியாணி தர வேண்டும் என்றும், நண்பர்களுடன் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிடுவார் என்றும், கடைக்கு முன்னால் தனது காரை நிறுத்தி இடையூறு செய்து வந்து உள்ளார் என்றும், இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகரன் ஆகியோர் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையுடன் தி.மு.க. தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    Next Story
    ×