search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus seat"

    குன்னூரில் பஸ்சில் இடம் பிடிக்க போலீஸ்காரர் ஜன்னல் வழியாக துப்பாக்கியை போட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மூப்பர்காடு, கொலக்கம்பை, முள்ளிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து வருகிறார்கள். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று மாலை முள்ளிகூர் செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் துண்டு, கைப்பை உள்ளிட்டவைகளை போட்டு சீட் பிடித்தனர். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்ய 2 போலீஸ்காரர்கள் வந்தனர். அதில் ஒருவர் ஜன்னல் வழியாக தனது துப்பாக்கியை சீட்டில் போட்டு இடம் பிடித்தார்.

    இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, பஸ்களில் சீட் பிடிக்க துப்பாக்கியை போடும்போது பயணிகள் அச்சம் அடைந்தனர். சமூக விரோதிகள் துப்பாக்கியை எடுத்துச்சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். போலீசார் இந்த செயலை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினர்.

    போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

    சத்திரக்குடி அருகே பஸ்சில் சீட் பிடித்த தகராறில் போலீசாரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம்:

    சத்திரக்குடி அருகேயுள்ள இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாத துரை (வயது 47). இவர் ராமநாதபுரத்தில் உள்ள போலீஸ் பணியிடை பயிற்சி முகாமில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று தனியார் பஸ்சில் சென்றபோது காலியாக உள்ள சீட்டில் அமர்ந்து உள்ளார். ‘இது ஏற்கனவே இடம் பிடித்த இடம், எழுந்து விடுங்கள்’ என்று பரமக்குடியைச் சேர்ந்த ராஜேந்திர பிரபு (38) என்பவர் தகராறு செய்துள்ளார்.

    இவருக்கு ஆதரவாக பஸ் கண்டக்டர் முரளி (26), செக்கர் சூரிய பிரகாஷ் (20) ஆகியோர் சேர்ந்து கொண்டு காசிநாத துரையை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து தலைமை காவலரை தாக்கிய 3 பேரையும் கைது செய்தார்.

    அரியானா மாநிலத்தில் பேருந்தில் இருக்கைக்காக நடைபெற்ற சண்டையில் 24 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், மோகித் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழன் கிழமை அன்று மிலனை சந்தித்த மோகித்தும் அவனது நண்பர்களும் மிலனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

    இதையடுத்து, மிலன் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், வியாழன் அன்று இரவு மோகித்தின் நண்பர்கள் இருவர் மிலனின் வீட்டிற்கு வந்து மிலனை சந்திக்க வேண்டும் என அவரது தாயார் சரளாவிடம் கேட்டுள்ளனர். மேலும், மிலனுக்கும் மோகித்துக்குமான சண்டையை சரிசெய்யவே சந்திக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மிலன் குமார் வெளியே வந்ததும், அவரது தாயாரிடம் அந்த நபர்கள் குடிக்க நீர் கேட்க, அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அடுத்த கணமே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்து பார்த்துள்ளார். மிலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருப்பதை கண்ட அவரது தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால், மருத்துவர்கள் மிலன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து, மோகித் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும், கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
    ×