search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theppa thiruvizha"

    • சுவாமி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா வருதல், மாலையில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படிதாரர்களான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அவர்களது தெருவில் உள்ள பாலசந்திர விநாயகர் கோவிலில் 6 மணி அளவில் அம்மையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அம்மையப்பர் எழுந்தருளினார். சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 9 மணிக்கு கோவிலை வந்தடைந்து. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தெப்ப திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், செயலாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் குடும்பத்தினர்கள், கோவில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி, வாசுதேவநல்லூர் நகரப் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைவர் கு.தவமணி, நாடார் உறவின்முறை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களான உபயதாரர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தக்கார் முருகன் தலைமையில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் போலீசாரும், வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் தீயணைப்பு படையினரும் செய்திருந்தனர்.

    • வீரராகவர் பெருமாள் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளினார்.
    • வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய திரண்டனர்.

    மேலும் உற்சவர் வீரராகவர் பெருமாள் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளினார்.

    வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • திருமஞ்சனம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாக விளங்கும் சக்கரபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் கோவில் திருக்குளமான சக்கர புஷ்கரணி குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி திருமஞ்சனம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு சக்கரபாணி பெருமாள் விஜயவல்லி தாயார், சுதர்சனவல்லி தாயாருடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, தக்கார் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சுதர்சன பக்தர்கள் செய்திருந்தனர்.

    • சிவகர தீர்த்த குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினர்.
    • இன்று ஞானப்பால் பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. தொடர்ந்து அதிகாரநந்தி கோபுர தரிசனமும், தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    அதையடுத்து வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா, திருக்கல்யாணம் பரிவேட்டை, குதிரை வாகனம், பிச்சாண்டவர் புறப்பாடு, தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளினர். அதையடுத்து அங்கு திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரில் சாமிகள் அசைந்தாடி வந்த கண் கொள்ளாக்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    நேற்று முன்தினம் நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, முத்துப்பல்லக்கு, அவரோகணமும், நேற்று இரவு தெப்ப உற்சவமும் நடந்தது. இதில் சிவகர தீர்த்த குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பத்தில் 7 முறை வலம் வந்தது. அதன்பிறகு சாமி மாட வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது.

    • நள்ளிரவு 12 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பகவதி அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நர்த்தன பஜனை, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா நடந்தது. இந்த தெப்பத்திருவிழா கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தின் கரையில் நடைபெற்றது. இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பகவதி அம்மனை எழுந்தருள செய்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெப்பக்குளத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் மேற்குப் பக்கம் உள்ள குளத்தின் கரையில் போடப்பட்டிருந்த பந்தலில் அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை வைத்து பூஜைகள் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    • நீராழி மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.
    • உற்சவர் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று அதிகாலை தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளல், சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பத்ம புஷ்கரணியில் உள்ள நீராழி மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.

    அதன் பிறகு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்போற்சவம் முடிந்ததும் உற்சவர் பத்மாவதி தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • தெப்போற்சவம் இன்று தொடங்கி ஜூன் 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • தெப்போற்சவத்தால் 5 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    அதையொட்டி முதல் நாளான இன்று உற்சவர்களான ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர், 2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) சுந்தரராஜசாமி மற்றும் கடைசி 3 நாட்களுக்கு மாலை 3.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை நீராழி மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன்பிறகு உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஜூன் 3-ந்தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும், ஜூன் 4-ந்தேதி இரவு 8 மணிக்கு கருட வாகனத்திலும் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    தெப்போற்சவத்தால் கோவிலில் மேற்கண்ட 5 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாக உள்ளது.
    • உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் மூலவராக புற்றிடம் கொண்டார் அருள்பாலித்து வருகிறார். உற்சவராக தியாகராஜர் அருள்பாலித்து வருகிறார். கமலாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். அதேபோல கோவிலுக்கு அருகே உள்ள கமலாலய குளம் புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. கமலாலயக்குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது.

    தியாகராஜர் கோவிலில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடந்தது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    • தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • 4-ந் தேதி கருட வாகன சேவை நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை 5 தெப்போற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மசரோவரத்தில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எல்லா துக்கங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    முதல் நாளான 31-ந் தேதி ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணசுவாமி, இரண்டாம் நாள் சுந்தரராஜசுவாமி, கடைசி மூன்று நாட்கள் பத்மாவதி தாயார் ஆகியோர் தெப்பத்தில் உலா வருவார்கள். இதனை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக நீரடா மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வருகிற 3-ந் தேதி இரவு 8 மணிக்கு தாயாருக்கு கஜவாகன சேவையும், 4-ந் தேதி இரவு 8 மணிக்கு கருட வாகன சேவையும் நடக்கிறது. தெப்போற்சவம் முடிந்து தினமும் கோவில் வீதிகளில் தாயார் ஊர்வலம் நடைபெறும்.

    தெப்போற்சவத்தையொட்டி 5 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது.

    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
    • பல்வேறு காரணங்களால் கடந்த 16 ஆண்டுகளாக தெப்ப திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி ஐந்துமுறை சுற்றிவந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பல்வேறு காரணங்களால் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்ப திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றதால் இதனை காண திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சாமி கோவில்.
    • அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்திற்கு சிவகாமி அம்பாளுடன் திருத்தளிநாதர் எழுந்தருளினார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. 5-ம் திருநாளான்று திருத்தளிநாதர் சாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    9-ம் திருநாள் அன்று பெரிய தேரில் சிவகாமி அம்மனும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதர் சாமியும், சிறிய தேரில் விநாயகப்பெருமானும் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருநாளில் திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. கோவிலில் இருந்து சாமி தெப்ப மண்டபம் எழுந்தருளினர். பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்திற்கு சிவகாமி அம்பாளுடன் திருத்தளிநாதர் எழுந்தருளினார்.

    தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை 3 முறை வலம் வந்தது. கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இந்தநிலையில், கார்காத்த வெள்ளாளர் சமூகம் சார்பில் புதிதாக செய்யப்பட்டு இருந்த தெப்பம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா கடந்த 20-ந் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி-கல்யாணசுந்தரர் எழுந்தருளினர்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் தெப்பம் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.

    இதில் பூண்டி கே. கலைவாணனன் எம்.எல்.ஏ., நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்திட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×